Adikesava Perumal, Thiruvattaru
Specialities : General |

இதுபற்றிய செய்தி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு நூலில் உள்ளது. மாங்குடிக் கிழார் என்ற சங்க கால புலவர் அந்த ஊரை ஆண்ட குறுநில மன்னனை 'வட்டாற்று எழினியாதன்' என பாடியுள்ளார்.
இந்த கோவில் 108 வைணவத் தலங்களுள் 76-வது இடத்திலும், 13 மலை நாட்டு தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆதி கேசவ பெருமாள் கோவிலை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். அவர் ஆதி கேசவ பெருமானை 'வட்டாற்றான்' எனவும் புகழ்ந்துள்ளார்.
தல புராணம்
பிரம்மா ஒரு முறை யாகம் செய்யும்போது மந்திர உச்சாடனங்கள் பிறழ்ந்ததால் யாகத் தீயில் இருந்து தீபகேசி என்ற அரக்கன் பிறந்தான். குமரி மாவட்டம் முனிவர்கள் தவம் இருக்கும் பகுதியாகும். அந்த அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் கொடுத்து வந்தான். அவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து அரக்கனை வதம் செய்து, சேஷனின் (பாம்பு) கீழ் அடக்கி, அதன் மேல் ஆதிகேசவ பெருமாள் பள்ளி கொண்டார் என்கிறது இக்கோவில் தலபுராணம்.
பாம்பணையின் கீழ் அகப்பட்ட பிறகும் அரக்கன் தன் 12 கைகளால் அழிவு செய்ய முயன்றான். அப்போது பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்திராட்சங்களை வைத்தார். அவை 12 சிவாலயங்களாக மாறின என்று வைணவ மரபு சார்ந்த வாய்மொழி கதையும் உள்ளது.
மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடும் போது, "கோபாலா கோவிந்தா" என்ற கோஷம் எழுப்பியபடி ஓடி விட்டு இறுதியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்துக்கு வருவது இன்றும் வாடிக்கையாக உள்ளது.
இங்கு முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு உள்பட 45க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இந்த கோவில் சோழர்கள், வேணாட்டு அரசர்கள், திருவிதாங்கூர் அரசர்கள் ஆகிய 3 மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
யோக நித்திரையில் பெருமாள்
கோவில் கருவறையில் ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷனின் மூன்று மடிப்பு பாம்பணை மேல் ஆதிகேசவ பெருமாள் தெற்கே தலை வைத்து வடக்கே காலை நீட்டி மேற்கு பார்த்த நிலையில் 22 அடி நீளத்துக்கு பிரம்மாண்டமாக யோக நித்திரையில் பள்ளி கொண்டுள்ளார். இடது கை நீட்டிய நிலையிலும், வலது கை யோக முத்திரையிலும் உள்ளது.
அவரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கருவறையில் 3 வாசல்களும் உள்ளன. ஆதி கேசவ பெருமாளின் சிரசில் இருந்து தொடங்கி பாதம் வழியே கோவிலை வலம் வருவது இக்கோவிலின் சிறப்பாகும். கருவறையில் பூதேவி, ஸ்ரீதேவி, ஹாதளேய முனிவர் ஆகியோரின் உருவங்களும் உள்ளன.
பாம்பணை மேல் பள்ளி கொண்ட மூலவர் விக்ரகம் 16,008 சாளக்கிரமம் உள்ளடங்கிய கடு சக்கரை கொண்ட மூலிகை படிமத்தால் ஆனதாகும். இதனால் இதற்கு அபிஷேகம் கிடையாது. ஆகவே அங்கேயே உற்சவ மூர்த்தி அமைத்து அபிஷேகம் நடக்கிறது. இந்த கோவிலின் விமானம் செம்பு தகடால் வேயப்பட்டு, தங்கமுலாம் பூசப்பட்ட ஐந்து கலசங்களும் உள்ளன. விமானத்தை அற்புத விமானம் என்று அழைக்கிறார்கள்.
ஆதி கேசவ பெருமாள் தீய சக்திகளை தன் பாம்பணையில் அழுத்தி வைத்துக் கொண்டு உலகை காத்து வருவதால், தீராத நோய் மற்றும் துன்பங்களுடன் வருபவர்களின் துன்பங்களை நீக்கி அருளுகிறார். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்துக்காக வருபவர்களுக்கு அவர்களின் வேண்டுதல் உடனேயே நிறைவேறுகின்றன.
தியானம் செய்யலாம்
கோவில் வளாகத்தில் தியானக்கூடமும் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு அமர்ந்து 108 முறை பெருமாள் நாமத்தை தியானித்துச் சொல்லி பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்கிறார்கள். அந்த தியனக்கூடம் சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
மேற்கு பிரகாரத்தில் வேணுகோபாலன் சன்னதி உள்ளது. வேணுகோபாலன் வலது காலை வளைத்து புல்லாங்குழலை இரு கைகளால் ஏந்தி நிற்கிறார். இதன் விமானம் திராவிட பாணியிலானது. தெற்கு பிரகாரத்தில் சாஸ்தா சன்னதி உள்ளது.
இந்த கோவில் கட்டிடக்கலையின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் அமைந்துள்ளது. கருவறையை அடுத்துள்ள ஒற்றை கல் மண்டபம் 18 அடி நீளம், 18 அடி அகலத்தில் அமைந்துள்ளது. அதனை அடுத்து உதய மார்த்தாண்ட மண்டபம் உள்ளது.
இந்த இரு மண்டபங்களிலும் மரத்தில் அஷ்ட லட்சுமி, திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைவது, விநாயர் திருமண ஊர்வலம் உள்பட பல்வேறு விதமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், நாலம்பலம் பகுதியில் ரதி, மன்மதன் சிற்பங்களும், ஸ்ரீபலி மண்டபத்தில் 12 தூண்களிலும் கர்ணன், கங்காளர், நர்த்தன காளி, குறவன், கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊத மிருகங்கள் தன்னை மறந்து மற்ற மிருகங்களிடம் பால் அருந்துவது போலவும், யானை தலை, புலி பால், சிங்கத்தின் கை, குதிரை உடம்பு, மயிலின் கால் ஆகியவை ஒரே உருவமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோவிலின் 4 சுற்று பிரகாரங்களிலும் 224 பாவை விளக்கு தூண்கள் உள்ளன. அவற்றில் ராமாயணம்,பாகவதம் தொடர்பான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு நாமும் ஒருமுறை சென்று வருவோமே.....!
விழாக்கள் - அமைவிடம்
தினமும் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 6 மணிக்கு உஷ பூஜை, 11 மணிக்கு உச்சி கால பூஜை, 12 மணிக்கு திருநடை சாத்துதல், மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு சாயராட்சை பூஜை, 8 மணி அத்தாள பூஜை அதை தொடர்ந்து திருநடை சாத்தப்படுகிறது.
கோவில் திருவிழா ஐப்பசி, பங்குனி ஆகிய இரு மாதங்களும் 10 நாட்கள் நடக்கிறது. ஆவணி மாதத்தில் திருவோணமும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். திருவோணம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய தினங்களில் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்படும்.
இங்கு பால் பாயாசம், அப்பம், பிரசாத ஊட்டு, சோறு, எரிசேரி கூட்டு ஆகியவைகள் சிறப்பு பிரசாதங்களாக வழங்கப்படுகின்றன.
நாகர்கோவிலில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. ரெயில் மூலம் செல்பவர்கள் குழித்துறை ரெயில் நிலையத்தில் இறங்கி 6 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவிலை அடையலாம்.
அதிசயிக்க வைக்கும் சூரிய கதிர்கள்
இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தின் உள்ளே சூரியனின் செங்கதிர்கள் விழுவது அதிசயமாக கருதப்படுகிறது. இந்த காட்சியை புரட்டாசி மாதம் 3-ந்தேதி முதல் 9-ந் தேதி வரையும், பங்குனி மாதம் 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையும் காணலாம்.
அப்போது இந்த அதிசய காட்சியை காண்பதற்காக பக்தர்கள் ஏராளமான அளவில் இக்கோவிலுக்கு வருகிறார்கள்.
Area : Thiruvattaru | Bus Route : |
:
|
|||
|
|||
|
|||
Related Temples
Copyright © 2010 Thiruhalam.com