Specialities : 108 holiest vishnavite shrines |

பஞ்ச ராத்திரிகள்: சிவனுக்குரிய ராத்திரிகள், நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மகா சிவராத்திரி என பெயர் பெற்றது. பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். இதற்காகவே ‘ஷராத்ரீசூக்தம்’ என்ற பாராயணம் தனியாக உள்ளது.
சிவராத்திரி வரலாறு: புராணங்களில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவாறு சொல்லப்பட்டுள்ளது. சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. அந்த நாளே சிவராத்திரி என்பர். ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் திருநீலகண்டர் என பெயர் பெற்றார். அன்றைய தினம் இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கி துதித்தனர். அந்நாளே சிவராத்தரி என கூறுவர். மார்க்கண்டேயன் உயிரை காக்க சிவன், எமனை காலால் உதைத்தார். அதன்பின் எமனை உயிர்ப்பிக்க தேவர்கள் வேண்டினர். அந்த நாளை சிவராத்திரி என்னும் கூறப்படுகிறது. அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்த தினமும் சிவராத்திரி என கருதப்படுகிறது.
சிவாலய தரிசனம்: சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மெய்சிலிர்க்க கண்டு தரிசித்து, அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஆன்றோர், சான்றோர் வாக்காகும். அபிஷேகத்துக்கு தேவையான பால், தேன், தயிர், சந்தனம், பழங்கள் போன்றவற்றுடன் கரும்புச்சாறு வழங்குவது மிகவும் புண்ணியமாகும். கரும்புச்சாறு தருவதால் தடைகள், தோஷங்கள், உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
சிவராத்திரி விரதம் சற்று கடினமானது. கடந்த காலங்களில் முன்னோர்கள் முறையாக அதை கடைபிடித்தனர். இந்த காலகட்டத்திலும் சிலர் முடிந்தவரை அதை கடைபிடித்து பின்பற்றுகின்றனர். சிவராத்திரி அன்று சூரிய உதயத்துக்கு முன்பு நீராடி அன்று முழுவதும் உண்ணா நோன்பிருந்து பகல் முழுவதும் சிவபுராணம், சிவஅஷ்டோத்திரம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மாலையில் சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபட வேண்டும். இரவு நான்கு ஜாமங்களில் கலந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். குறிப்பாக இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. மவுனம் மிகப் பெரிய பலம். மவுன விரதம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் உகந்ததாகும். சிவராத்திரி அன்று இதை செய்வதால் வாக்குபலிதமும், மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு.
வைணவ சம்பிரதாயத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு உள்ள பலன்கள் எல்லாம் சைவ வழிபாட்டில் சிவராத்திரிக்கு உண்டு. சிவராத்திரி விரதமும் சிவ தரிசனமும் எமபயம், மரண பயம் போக்கி, முக்திக்கு வழிகோலும் என்பது நாயன்மார்களின் கூற்றாகும்.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களிலும் குற்றாலம், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், திருவாலங்காடு ஆகிய பஞ்சரத்ன சபைகளிலும் ஆடல்வல்லானின் தரிசனத்தை காண்பது மிகவும் சிறப்பு என்பது மட்டுமின்றி, புண்ணியம் சேர்ப்பதாகும்.
- ஜோதிட முரசு
மிதுனம் செல்வம்
Source : http://news.amanushyam.in
Area : | Bus Route : |
:
|
|||
|
|||
|
|||
Related Temples
Copyright © 2010 Thiruhalam.com