Article  
Thiruchendur Murugan Temple
Specialities : General  
x இத்திருத்தலம் நெல்லை மாவட்டத்தில் அமைந்து முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். இத்திருத்தலம் செல்ல திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து வசதி அதிகம் உள்ளது.

திருமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திருச்செந்தூர் உள்ளது. திருச்சீலைவாய் எனும் படைவீட்டு வகையில் இரண்டாம் படை வீடாய் இருந்தாலும் திருவருட் சிறப்பில் முதன்மையான தளமாக இருக்கிறது. இத்திருத்தலம் கடற்கரை மீதமர்ந்து எழிலோடு காட்சி தருகிறது. இத்திருத்தலம் ஓயாத மன்னார் குடாக் கடல் அலைகளால் தாலாட்டப்படுகிறதாலேயே அலைவாய் எனப் பெயர் பெற்றிருக்கலாம். இலக்கியப் புகழ் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், புறநானூறு, கந்த புராணம் மற்றும் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களில் போற்றிப் பாடப்படுகிறது.

இத்தலத்தை வியாழபகவான் வழிபட்டதாலும், தாராகாசுரனையும், கிரெளஞ்ச மலையையும் அழித்து தேவர்களைச் சிறைமீட்டு, தேவர்களின் வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டதால் இத்திருத்தலம் பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சூரனை அழித்து, தேவர் குறை தீர்த்து வெற்றிசூடி இத்தலத்தில் தங்கியதால் "திருச்செந்தூர்" எனப் பெயர் வந்தது. இதற்கு வெற்றி நகர் என்ற பெயரும் உள்ளது.

இத்தலம் பற்றி அருள்நெறிப் பெரியோர்கள் கூறும்போது, இத்திருத்தலம் வெற்றியையும், செல்வத்தையும் அருளப்பெறலாம் என்பார்கள்.

செந்திலாண்டவரின் திருக்கோயில் கடற்கரையோரகமாக உள்ள பெரிய கோயிலாகும். இத்திருக்கோயில் கடற்கரையோர மணல்மேட்டில் மூன்று பிரகாரங்களையும், அழகிய ராஜகோபுரத்தையும் கொண்டுள்ளது. இக்கோயிலைப் பற்றி வரலாறு கூறுகையில், கடலலைகள் இக்கோயிலை இடைவிடாது தாலாட்டுகிறது எனவும், இக்கோயில் ஆதியில் சந்தனசைலம் என வழங்கப் பெற்ற கல்லும் மண்ணும் கலந்த குன்றைக் குடைந்து கட்டப்பட்டது எனவும், அதன்பின் பாண்டியர்கள், சேரர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இத்திருக்கோயிலைச் சுற்றிலும் பன்னீர் மரங்கள் காணப்படுகிறது. தேவர்களை கந்தப் பெருமான் காத்து நின்றதால், நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக திருச்செந்தூர் முருகனை வணங்கி நிற்பதாக கூறுகிறார்கள். இக்கோயிலைச் சுற்றிலும், கடல் மண்மேடுகளும், பனை மரங்களும் இருப்பதால் ஒரு பெரிய கோட்டைக்குள் ஆலயம் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்பதுபோல் காட்சி தருகிறது.

இத்திருக்கோயில் விசுவாமித்திரரின் குடல்நோயைக் குணப்படுத்த, திருச்செந்தூர் முருகனை வணங்கி, விபூதி பெற்று குடல்நோயைக் குணப்படுத்திக் கொண்டாராம். ஆகையால் இங்கு வரும் பக்தர்களுக்கு, பன்னீர் இலைகளை வேதங்களாகக் கருதி அதிலே விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஆலயத்தில் முருகனை வழிபடச் செல்லும்முன் கடலில் நீராடிவிட்டு, அதன்பின் நாழிக்கிணறு எனும் சிறப்பு பெற்ற தீர்த்தத்தில் நீராட வேண்டும். கடலை ஒட்டி நாழிக்கிணறு இருந்தாலும் அந்நீர் உப்பு சுவையற்று இருப்பது அதன் சிறப்பு.

கடற்கரைக் கோயில் பாதையில் தூண்டுகை விநாயகர் கோயில் உள்ளது. அவரை வணங்கிய பிறகே தம்பி முருகனை வணங்க இத்திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். இதுவே இத்திருக்கோயிலின் ஐதீகமாக கருதப்படுகிறது. தன் தம்பி முருகனை வணங்க வரும் பக்தர்களுக்கு கைதூண்டி காண்பிப்பதால் இவரைத் தூண்டுகை விநாயகர் என்றழைக்கின்றார்கள். இவரை வணங்கிவிட்டு பிறகு 2 கி.மீ. தூரம் தொலைவில் உள்ள முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

ஆலயம் தெற்கு நோக்கி இருக்கிறது. கோயிலில் மூன்று சுற்றுகள் உள்ளன. ஆலயம் ஒன்பது நிலைகளுடன் கொண்ட ராஜகோபுரங்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இக்கோபுர கட்டுமானப் பணியின்போது செந்திலாண்டவரே மனித உருவில் வந்து கூலி ஆட்கள் எல்லோருக்கும் விபூதி வழங்கியதாக புராணங்கள் சொல்கின்றன. வாங்கிய பிரசாதத்தை தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டி சென்றபின் பார்க்கும்படி கூறியதின்பேரில், விநாயகர் ஆலயம் தாண்டி விபூதியை பார்த்தபோது அவ்விபூதி கூலிப்பணமாக மாறியிருந்ததாம்.

இத்திருக்கோயில் மூன்று சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டதாகும். இந்த ஆலயத்தின் மூன்றாவது பிரகாரம் கோயிலுக்கு வெளியே கடற்கரையை ஒட்டி இருக்கிறது. இந்த வெளிப்பிரகாரத்தின் வடக்குப்புறமாக வள்ளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் ஒரு குகைக் கோயிலாக இருக்கிறது. குகைக்கோயிலின் அருகே பதினாறுகால் மண்டபமும், குகையின் வடபுறம் அர்த்த சித்திர உருவில் சூரஸம்ஹாரச் சிலையும், அம்மன் சிலையும் இருக்கிறது. குகைக்கோயிலின் மேற்கு பக்கமாக செந்தில் ஆண்டவர் எழுந்தருளிய மண்டபத்தையும் காணமுடிகிறது. மூன்றாம் பிரகாரத்தில் வசந்த மண்டபம், சண்முக விலாச மண்டபம் என்ற மண்டபங்கள் தெற்கு பாகத்தில் உள்ளது. சண்முகவிலாச மண்டபத்தில் திருமுருகனின் அறுபடை வீடுகள் சித்திர வடிவில் உள்ளது.

இரண்டாவது பிரகாரத்தில் சென்றால் சண்முக விலாச மண்டபத்தில் உள்ள படிக்கட்டுகள் வழியாக இரண்டாம் பிரகாரத்தில் உள்ளே நுழைய வேண்டும். இந்த இரண்டாம் பிரகாரத்துக்கு சிவிலி மண்டபம் என்று பெயர் உண்டு. இப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்களைக் காண முடிகிறது.

சித்திவிநாயகர், ஆன்மநாதர், சூரசங்காரர், சோமசுந்தரப் பெருமான், மீனாட்சி அம்மன், ஸ்ரீமூலநாதர், அருணகிரி நாதர், வல்லபகணபதி ஆகியோர்களுக்கு சன்னிதிகள் இருக்கின்றன. இதே பிரகாரத்தில் சந்தானகிருஷ்ணனுக்கும், ஏழுமலையானுக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. பஞ்சலிங்கங்களுக்கும் ஒவ்வொரு சன்னிதி உள்ளது. சூரசங்காரர் சிற்பம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அழகிய தோற்றத்துடனும், எழிலுடனும் காணப்படுகிறது.

முதல் பிரகாரத்தின் நுழைவாயிலில் வீரகேசரியும். வீரமார்த்தாண்டரும் காவல் காத்து நிற்கின்றனர். தெற்கு நோக்கி ஜெயந்திநாதரும், வள்ளி தெய்வானையும் தனித்தனி பளிங்கு கோயிலில் காட்சி தருகிறார்கள். ஜெயந்தி நாதர் சன்னிதியில் வள்ளி தெய்வானை சமேதராய் அருள் முருகன் காட்சி தருகிறார்.

முதற்பிரகாரத்தில் சங்கரநாராயணர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, வேதபுரீஸ்வரர், திருவாதபுரீஸ்வரர், நாகநாத சோமேஸ்வரர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், நடராஜர்-சிவகாமி அம்மன், சனீஸ்வர பகவான், பைரவர் போன்ற தெய்வங்கள் தனித்தனி சந்நிதியில் எழுந்தருளி காட்சி தருகிறார்கள்.

இப்பிரகாரத்தில் உள்ள ஆறுமுகநாயனார் சன்னிதி தெற்கு நோக்கி இருக்கிறது. ஆறுமுகநாயனார் வள்ளி தெய்வானை சமேதராக அருள்பாலிக்கிறார்.

இச்சன்னிதியின் சற்று மேற்காக உள்ள அர்த்த மண்டபத்தில் கர்ப்பகிரஹம் உள்ளது. கர்ப்பகிரஹத்தில் செந்திலாண்டவர் கிழக்கு திசை நோக்க பாலமுருகனாக நின்று அருளுகிறார். கர்ப்பகிரகத்தின் முன்பாக உள்ள அர்த்த மண்டபத்தில் வீரபாகுவும், வீரமகேந்திரரும் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள். காவல் காத்து நிற்கும் வீரபாகுத் தேவருக்கு முதல் பூசை நடந்த பிறகே மூலவர் முருகனுக்கு பூசைகள் நடக்கின்றன. பாலகன் உருவில் காட்சிதந்து அருள்பாலிக்கும் முருகனைக் காணக் கண் கோடி வேண்டும்.

வீரபாண்டிய கட்டப்பொம்மனின் தந்தையான ஜெகவீரகட்டபொம்மன் திருச்செந்தூர் முருகன் மீது அதிகமான பக்தி உடையவர். தினமும் முருகனின் உச்சிகால பூசை முடிந்த பிறகே உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதற்காக திருச்செந்தூரிலிருந்து 60 மைல்கள் தூரம் வரை கல்மண்டபம் அமைத்து முரசறைந்து தெரிவிப்பார்களாம்.

ஜெகவீரகட்டபொம்மன் திருச்செந்தூர் முருகன் மீது கொண்ட அளவற்ற பற்றுதலால் தன் வசமிருந்த நகைகள் அத்தனையும் முருகனுக்கே காணிக்கையாக கொடுத்துவிட்டாராம். அப்போது அவரது மனைவி ஒரே ஒரு பதக்கத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துள்ளாராம். அன்றிரவு முருகப் பெருமான் ஜெகவீரகட்ட பொம்மனின் கனவில் தோன்றி தன் மனைவி வள்ளி இரத்தின பதக்கம் அணிய வேண்டுமென கூறுகிறார். ஆனால் ஆண்டியாகிய என்னால் எப்படி வாங்கிக் கொடுக்க முடியும் என தெரிவித்தாராம். மறுநாளே ஜெகவீரகட்டபொம்மன் தன் மனைவியிடமிருந்த இரத்தின பதக்கத்தை முருகனிடமே காணிக்கையாக செலுத்திவிட்டாராம்.

ஜெக வீரகட்டபொம்மன், அவரது மகனான வீரபாண்டிய கட்டபொம்மனும் வணங்கி வந்த அழகிய முருகனின் திருவுருவத்தை திருச்செந்தூர் கோயிலில் அழகிய கண்ணாடி பெட்டியில் மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

தலவரலாறு

சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்களும், பிரம்மா, விஷ்ணுவும் சிவபெருமானிடம் சென்று குறைகளை முறையிட்டனர். சிவபெருமான் அவர்களின் குறைகளைக் களையும் நோக்கில் தமது பாலகன் முருகனை அழைத்து, சூரபத்மனின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கட்டளையிட்டார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட தகப்பன்சாமி முருகப்பெருமான் தனது பனிரெண்டு திருக்கரங்களிலும் படைக்கலன்கள் பல தாங்கி, தாய் உமாமகேஸ்வரியிடம் ஆசிபெற்று சூரபத்மனை எதிர்க்கப் புறப்பட்டான். பஞ்ச பூதங்களும், மூவரும், தேவரும் ஆசி வழங்கி, தங்கள் ஆதரவினை தெருவிக்க, லட்சக்கணக்கான படை சகிதம் சூரபத்மனுடன் போரிட்டான்.

முருகனுடன் வீரபாகுவும் உதவியாக சென்றான். போரில் முதலில், கிரெளஞ்சமலை உருவில் பிரம்மாணடமாக எழுந்து நின்று அட்டகாசம் புரிந்து வரும் சூரபத்மனின் தம்பி தாரகேசுவரனை சாய்த்தான் முருகப்பெருமான் வெற்றி கண்டார்.

அடுத்து முருகப் பெருமான் சூரபத்மனை நெருங்கி, இருவருக்குமிடையே போர் கடுமையாக நடந்தது. சூரபத்மன் தான் பெற்ற சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி போரிட்டு, மாயமந்திரங்களையெல்லாம் பிரயோகித்து முருகனை போரில் வென்றுவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டான். கடைசியாக, திருமுருகன் விசுவரூபமெடுத்து, தனக்கு தாய் தந்தையரால் ஆசி வழங்கி அருளிய சக்தி வேலால் சூரபத்மனுடைய உடலை இருகூறாக்கி சாய்த்தான் முருகப்பெருமான். அதில் சூரபத்மனின் உடலின் ஒரு பாகம் சேவலாகவும், மறு பாகம் மயிலாகவும் மாறிற்று.

சூரபத்மனின் உடலைப் பிளந்த சக்திவேல் கங்கையில் நீராடி மீண்டும் முருகப்பெருமானின் கையில் வந்தடைந்தது. அவ்வாறு இருகூறான உடலிலிருந்து தோன்றிய சேவலும், மயிலும் திருக்குமரனின் காலடியில் பணிவுடன் வந்து நிற்க, சேவலுக்கும், மயிலுக்கும் ஞானமோட்சம் அளித்து, மயிலைத் தனது வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் முருகன்.

தேவர் குலம் பிழைத்து, அசுரர்குலம் ஒழித்த முருகன், தேரில் ஏறி தனது படைகளுடன் திருச்செந்தூர் வந்தடைந்து எழுந்தருளி காட்சிதந்தார்.

இன்றளவும் திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமான் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறை தீர்த்து, அசுர குணங்களை தீர்த்து அருளுகின்றார்.

திருச்செந்தூர் பெருமைகள்

கடலலைகள் இக்கோயிலை தினமும் அடிவருடுவதால் இக்கோயிலை திருச்சீரலைவாய் என்று போற்றப்படுகிறது. இத்தலத்தின் பெருமைகள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

கந்தர் கலிவெண்பாவை அருளிய குமரகுரு சுவாமிகள் தனது ஐந்து வயது வரை பேசும் திறனறியாமல் இருந்தார். திருக்குமரன் அக்குழந்தையின் முன் தோன்றி பேசும் திறனை அளித்தார். அது முதற்கொண்டே குமரகுருபரர் சைவ சமயத்தை தனது நூல்கள் மூலம் வளர்க்கத் தொடங்கினார்.

பகழிக்கூத்தர் என்ற வைணவப் பெருமகனார் அதிக வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான் தன்னைப் பற்றி பிள்ளைத் தமிழ் பாட பணித்து கட்டளையிட்டார். கூத்தர் முருகப்பெருமானை தலைவனாக வைத்து, 'திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்' என்ற தலைப்பில் பாடினார். இதனைப் பாடி முடித்ததும் அவர் நோய் முற்றிலும் தீர்ந்து நலமடைந்தார்.

ஆதிசங்கரரை காசநோய் பிடித்து வாட்டியது. "செந்திலம்பதி சென்று கந்தனை வேண்டினால் நலம் பல பெறலாம்" என்று முக்கன் முதல்வன் சிவபெருமான் உணர்த்த, ஆதிசங்கரர், "சுப்ரமண்ய புஜங்கம்" என்ற அற்புதமான பாமாலையைப் பாடி தன் காசநோய் நீங்கப்பெற்றார்.

கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட வியாழ பகவான் திருச்செந்தூர் முருகனை வணங்கி இலைப் பிரசாதம் வாங்கி, நெற்றியில் அணிந்து கொண்ட உடனேயே அந்நோயிலிருந்து விடுதலை பெற்றார்.

ஒருவன் ஜாதகத்தில் குருபுத்தியோ, சந்திர தசை ஆரம்பிக்கும் போதோ, குரு தசை நடக்கும் போதோ திருச்செந்தூர் முருகனை வணங்கினால் தீயபலன்கள் விலகி, நம்மிடம் தீயபலன் அண்டாமல் அணுகிவிடும். வியாழனுக்கு உகந்தவர் திருச்செந்தூர் முருகப் பெருமான்.

செந்திலம்பதியில் குடிகொண்ட செந்திலாண்டவனை வணங்கினால் வந்த வினையெல்லாம் வந்த திசையறியாமலே சிதறிடும் என்பது கந்தரலங்காரம் திருமொழி ஆகும்.

இத்தலத்தில் கந்தசஷ்டி விரதம் ஆறுநாட்கள் படு விமரிசையாக கொண்டாடப்படும். வைகாசி விசாக திருவிழா, மாசி, பங்குனி மாதங்களிலும் திருச்செந்தூர் இத்திருத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
Area :
Bus Route :
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com