Article  
Thiruvavinankudi Arumugan Temple
Specialities : General  
x இத்திருத்தலம் திண்டுக்கல்லில் இருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் கோயமுத்தூர் செல்லும் பாதையில் உள்ளது. ஆறுமுகப்பெருமான் கோவணாண்டியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆவினன்குடியில் போக முனிவர் என்ற சித்தர் இங்கு வாழ்ந்ததால் "சித்தன் வாழ்வு" என்று பெயர் உள்ளது. போக முனிவரின் சமாதி மலையின் மேல் காணப்படுகிறது.

மலையடிவாரத்தில் திருவாவினன்குடி கோயிலும், மலை மேல் பழனியாண்டவர் திருக்கோயிலும் உள்ளது. இதனை திருமுருகாற்றுப்படையில் பழனி பற்றி விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது. முருகன் குடிகொண்டுள்ள அறுபடை வீடுகளில் இது மூன்றாம் படைவீடாக உள்ளது.

பழனி என்பது 'பழம் நீ' என்பதன் திரிபென்று பழனித் தல வரலாற்றில் கூறப்படுகிறது.

இத்தலத்தின் மீது தண்டாயுதபாணியின் திருக்கோயிலும், நகரத்துள் தேவியருடன் வேலாயுதசாமி திருக்கோயிலும் உள்ளது. மலையை பழனி என்றும், நகரிலுள்ள திருக்கோயிலை ஆவினன்குடி என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

பழனிமலைத் தீர்த்தங்கள்

இங்கு புனித தீர்த்தங்களான வையாபுரி, சண்முகா நதி, சரவணப்பொய்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. பழனிமலை தண்டாயுதபாணியை தரிசிக்க செல்லும் முன் இந்த புனித தீர்த்தங்களில் நீராட வேண்டும். இதில் சரவணப் பொய்கை தீர்த்தம் முருகனால் தோற்றுவிக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில், வராக மலைக்கும், கொடைக்கானல் மலைக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் பழனி மலையும், இடும்பன் மலையும் அடுத்தடுத்து அமைந்து இருக்கிறது. பழனி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ள மலை 450 அடி கொண்டதாகும்.

இடும்பன், அகஸ்தியரின் ஆணைப்படி இரண்டு மலைகளையும் காவடியாக தோளில் தூக்கிக் கொண்டு புறப்பட்டு சென்றான். நீண்ட தூர பயணத்தால் களைப்பு தீரவேண்டும் என்பதற்காக, காவடியை கீழே இறக்கி வைத்துவிட்டு திரும்ப வந்து மலையைத் தூக்க முயற்சிக்கும்போது அவனால் தூக்க முடியவில்லை. மலையில் உள்ள மரத்தின் மீது பாலகுமாரன் நின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்து சினங்கொண்ட இடும்பன், முருகன் மீது பாய்ந்தான். இருவருக்குமிடையே போர் நடந்ததில் இடும்பன் கொல்லப்பட்டான். பின்னர் இடும்பனின் மனைவி கேட்ட வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அவனை மீண்டும் உயிர்ப்பித்தான் பாலகுமாரன். அதன்பின்னர் இடும்பன் விரும்பியபடி அவனை வாயிற் காப்போனாக ஆக்கிக் கொண்டான் முருகன். அந்த இருமலைகள்தான் தற்போது பழனி மலையாகவும், இடும்பன் மலையாகவும் இருக்கிறது.

தன்னைப்போல் முருகனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும், நீங்காத செல்வத்தையும், ஞானத்தையும் முருகன் அருள வேண்டும் என்று இடும்பன் வேண்டிக்கொள்வானாம்.

இம்மலையைச் சுற்றி கிரிப்பிரதட்சணம் செய்யும் வழியில் சோலைகளும், மயிலின் உருவங்கள் அமைந்த மண்டபங்களும் உள்ளன. இக்காட்சிகள் பண்டைய பக்தி முறையையும், பெருமைகளையும் கூறுவதாக உள்ளது.

பழனி மலையடிவாரத்திலுள்ள திருவாவினன்குடியில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு குழந்தை வேலாயுத சுவாமி என்ற திருநாமத்துடன் விளங்கி வருகிறார். குழந்தை வேலாயுதசாமி மயில் மீது அமர்ந்து அருள் தருகிறார். குழந்தை வேலாயுதசாமியை வணங்கிய பிறகு மலை மீது எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவரை தரிசித்து அருள் பெற வேண்டும்.

மலை உச்சிக்குச் செல்ல படிக்கட்டுப் பாதை, யானையடிப் பாதை, இழுவை ரயில் பாதை போன்ற வசதிகள் உள்ளன. மலையடிவாரத்தில் இருந்து படிகட்டுகள் வழியாக சென்றால் நிறைய மண்டபங்கள் உண்டு. பாத விநாயகர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி, தெய்வானை திருமணக் காட்சி சுப்ரமணியர், வீரபாகு ஆகியோரின் சிற்பங்களைக் காண முடிகிறது. சூரியன், பூமாதேவி, மகாலெட்சுமி, அக்கினி இடும்பன், காமதேனு ஆகிய சந்நிதிகள் காணப்படுகிறது.

யானையடிப் பாதையில் சென்றால் வள்ளியம்மையின் சுனை, வேலன் முருகனின் சிற்பம், சிவன், பார்வதி, முருகன், கணபதி ஆகிய சிற்பங்களும், முருகன் ஞானப்பழம் பெற்ற வரலாற்று சிற்பங்களும் காணப்படுகிறது.

சிவகிரி, சிவகிரி மலையென்றெல்லாம் கூறப்படும் பழனிமலையில் உள்ள தண்டாயுதபாணியின் கோயில் இரு பெரிய பிரகாரங்களுடன் உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம், நாயக்கர் மண்டபம் என இரு மண்டபங்களும், நாயக்கர் மண்டபத்தில் சுப்ரமண்யர், அருணகிரிநாதர், நக்கீரர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இரண்டு மண்டபங்களுக்கும் இடையே வல்லப விநாயகர் சந்நிதியும், கொடி மரம், அக்கினி குண்டம், தங்கரத மண்டபம் ஆகியவையும் காணப்படுகின்றன.

ஐந்து நிலைகளைக் கொண்டுள்ள இராச கோபுரம் உள்ள வாயில் வழியாக முதற் பிரகாரத்திற்குச் சென்றால் இராஜகோபுரம் சிற்பங்களைத் தாங்கி அழகுடன் உள்ளது.

முதல் பிரகாரத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பாரவேல் மண்டபம், நவரங்க மண்டபம் என்று இரண்டு காணப்படுகிறது. வடக்குப் பக்கமாக மலைக்கொழுந்தீஸ்வரர், அம்பிகை, நவவீரர்கள் ஆகியோர்களின் சந்நிதிகளும், தெற்கு பக்கமாக சப்தகன்னியர், கைலாசநாதர், சண்டிகேஸ்வரர் ஆகியோர்களின் சன்னிதிகளும் உள்ளன. போகமுனிவருக்கென்று தனிச் சந்நிதி உண்டு. அங்கு அவர் வழிபட்ட புவனேஸ்வரி, மரகதலிங்கம் ஆகிய விக்கிரகங்கள் உண்டு. இச்சந்நிதியில் உள்ள சுரங்கப் பாதையின் வழியாகச் சென்று பழனியாண்டவர் சந்நிதியை போக முனிவர் அடைந்தார் என்றும் கூறுகிறார்கள்.

நவரங்க மண்டபத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட சேவற்கொடி ஒன்று உள்ளது. இக்கொடி மீது உயிருள்ள சேவல் ஒன்று வந்து அமர்ந்து அடிக்கடி கூவுவதை காணமுடிகிறது. இந்த சேவற்கொடியின் அருகில் உள்ள தண்டாயுதபாணியை வணங்கினால் அப்பெருமான் நாம் எண்ணிய எண்ணங்களை எல்லாம் ஈடேற்றி வைப்பான் என்று கருதுகிறார்கள். நாம் அவ்வாறு வணங்கும் போது அச்சேவல் வந்து கூவினால் நாம் நினைத்தது நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.

நவரங்க மண்டபத்திற்குள் உள்ள உற்சவமூர்த்தி, சண்முகன், பாலகுமாரன், தட்சிணாமூர்த்தியை தரிசித்து விட்டுச் சென்றால் மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், கர்ப்பகிரகமும் காணப்படுகிறது. கர்ப்பகிரகத்தின் மேல் உள்ள விமானம் தங்கத்தால் ஆனதாகும்.

கர்ப்பகிரகத்தின் வடக்குப் பக்கம் உள்ள சுவரில் முருகன், மன்னன் உருவில் குதிரை மீதேறி இடும்பனுக்கு வழிகாட்டும் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. கர்ப்பகிரகத்தில் தண்டாயுதபாணி, கோவணம் மட்டும் தரித்து ஒரு கையை இடையில் ஊன்றி, இன்னொரு கையில் தண்டமும் தாங்கி மேற்கு திசை நோக்கி காட்சி தந்து அருளுகிறார்.

மூலவர் திருமுருக தண்டாயுதபாணி மற்ற சிலைகளைப் போன்று உலோகத்தாலோ, கல்லிலோ செதுக்கப்பட்டது இல்லை. தண்டாயுதபாணி உருவம் ஒன்பது விதமான மூலிகைகளால் உருவானதாகும். மூலவருக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை நாம் அருந்தினால் நம் உடலில் உள்ள நோய் நொடிகள் நீங்கப் பெறும். ஆனால் காலத்தால் இவ்வுருவம் சிதைந்து போனபடியால் தற்போது மூலவருக்கு அபிஷேகம் நிறுத்தப்பட்டு, தற்போது உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

"தண்டாயுதபாணிப் பெருமான் ஆண்டி தவக்கோலத்தில் நின்ற இப்பழனிமலையில் திருமுருகனின் திருவடிவம் பிரணவ வடிவமாகத் திகழும்" என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து, பழனியில் கோபமுற்று ஆண்டிக் கோலத்தில் நின்ற, தன் பாலகனின் சினம் தணித்து சிவ-சக்தி-பாலகன் மூவரும் திருக்கயிலை சென்றடைந்தனர்.

இக்கோயிலில் என்றும் திருவிழாக் கோலம் தான். தம்மை ஆட்கொள்ளும் பழனி முருகனை தங்க மயில் வாகனத்திலும், தங்க ரதத்திலும் எழுந்தருளச் செய்து, முருகனை மலை மீதும், அடிவாரத்திலும் வலம்வரச் செய்து தங்கள் பிணி தீர்த்துக் கொள்கின்றனர் பக்தர்கள்.

மேலும் பங்குனி திருவிழா இங்கு சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள், பயண முடிவில் பழனி ஆண்டவரை தரிசித்து செல்லும் வழக்கம் தற்போது மரபாக கடைபிடிக்கப்படுகிறார்கள்.
Area :
Bus Route :
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com