www.thiruthalam.com - Article
Thiruparankundram Murugan Temple
Specialities : General  
x பாண்டிநாடு, மலைநாடு, நடுநாடு, தொண்டைநாடு, ஈழ நாடு, வடநாடு போன்ற தேசங்களிலெல்லாம் பாடல் பெற்ற சிவத்தலங்களெல்லாம் பரவி இருக்கிறது. பாண்டி நாட்டுப் பதிகளில் பதினான்கில் முக்கிய திருக்கோயில்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று.

இத்திருத்தலம் மதுரைக்கு தெற்கே ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரானது மலைகடல் மட்டத்திற்கு மேல் 1050 அடி உயரத்தில் உள்ளது. பாண்டியர்களின் தலைநகராகிய மதுரை மாநகரையடுத்து உள்ளதால் திருப்பரங்குன்றம் பழமையும், சிறப்பும் பெற்று உள்ளது. இத்தலம் திருமுருகாற்றுப்படை, பரிபாடல், மதுரைக் காஞ்சி, கலித்தொகை, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலெல்லாம் போற்றப்படுகிறது.

திருமுருகாற்றுப்படையில், குன்றத்தின் வனப்பையும், வளமையையும் பற்றி குறிப்பிடுகையில்:

"மாடமலி மறுகிற் வடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முன்தாள் தாமரைத் துஞ்சிவைகறைக்
கள் கமழ் நெய்தல் ஊதி ஏற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன்."

என்று பாடப்பட்டுள்ளது.

திருப்பரங்கிரி, கந்தமாதனம், கந்தமலை என்று இப்பதியை அழைக்கின்றனர். முகமதியர் சிக்கந்தர் மலையென்றும் அழைக்கின்றனர். மலையின் மேலே முகம்மதியர்களின் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. அம்மலையை ஸ்கந்தர் மலையென்றும், சிக்கந்தர் மலையென்றும் அழைக்கிறார்கள்.

பத்துப்பாட்டில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் சிவபூசையில் மெய்மறந்து இருந்த போது, பூதம் ஒன்று இவரைக் கொண்டு போய் குகை ஒன்றில் வைத்து அடைத்தது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாட, முருகன் அங்கு தோன்றி, மலையைப் பிளந்து நக்கீரரை விடுவித்தார். நக்கீரர் அமர்ந்து பூசை செய்த இடத்தைப் பஞ்சாட்சரப் பாறையென்றும், முருகன் மலையைக் கீறிய பிளவையும் இன்றும் திருப்பரங்குன்றத்தில் காணலாம்.

தேவாரத்திலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இப்பகுதியைச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

இக்கோயில் மலையடிவாரத்தில் இருக்கிறது. முருகப் பெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்து அருளுகிறார். இக்குன்றினைச் சுற்றிலும் குகைக் கோயில் காணப்படுகிறது. உமையாண்டார் ஆலயம் என்ற பெயரும் இக்கோயிக்கு உண்டு. பஞ்சபாண்டவர் படுக்கை என்று இன்னொரு குகை உள்ளது. மலைஉச்சிக்குப் போகும் வழியில் பழனி ஆண்டவர் கோயிலும், மலை உச்சியில் சிக்கந்தர் பாட்சா என்னும் முகமதிய மகானின் சமாதி ஒன்றும் இருக்கிறது. இச்சமாதியைக் கடந்து சென்றால் காசி விஸ்வநாதர் கோயிலை காணமுடிகிறது. இதன் சமீபமாக காசி சுனைதீர்த்தம் என்ற சுனை ஒன்றுள்ளது. இத்தீர்த்தம் முருகனின் சக்திவேலால் உண்டாக்கப்பட்டது. இத்தீர்த்தம் கங்கை நீருக்கு சமமாக புனிதமாக கருதப்படுகிறது. இச்சுனை தீர்த்தம் எந்த காலத்திலும் வற்றுவதில்லை. இச்சுனையை அடுத்துள்ள பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தாக அழகாக காணப்படுகிறது.

இக்குன்றின் வடபாகத்தில் முருகப்பெருமான் திருக்கோயிலில் காட்சி தருகிறார். இக்கோயிலில் நாற்பத்தொன்பது படிகள் உள்ளன. மேலும் இக்கோயிலை சிறப்பிக்கும் வகையில், ஏழுநிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இதை அடுத்து சுந்தரபாண்டியன் மண்டபமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது.

சுந்தரபாண்டியன் மண்டபத்தில் அறுபத்தாறு தூண்கள் உள்ளது. அதனுடைய மத்தியில் அமைந்துள்ள தூண்களில் தெய்வாணையுடன் திருமணக் காட்சியும், கூத்தாடும் விநாயகர், வீரவாகு, துர்க்கையம்மன் ஆகிய சிற்பங்கள் அழகாய் உள்ளது. சுந்தரபாண்டிய மண்டபத்தை அடுத்து உள்ள திருமண மண்டபத்தில் லட்சுமி தீர்த்தம், பிரம்மகூடம் என்ற சந்யாசக்கிணறு ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு தீர்த்தமும் ஒவ்வொரு சிறப்பைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. பிரம்மதேவனால் உருவானது பிரம்மகூட தீர்த்தமாகும். இந்த நீர் சர்க்கரை வியாதியை தீர்க்கக்கூடியது என்கிறார்கள். கல்யாண மண்டபத்தை ஒட்டினாற்போல் கொடிமரம் ஒன்று உள்ளது. அதன் முன்பாக மயில், நந்தி, மூஷிகம் ஆகிய வாகனங்கள் காணப்படுகிறது.

கொடி மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் மகா மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்திற்கு செல்லும் படிகட்டுகளில் பூதகணங்கள் காவல் புரிவதாக கூறுகின்றனர். மகா மண்டபத்தை அடுத்து வியாசர், பராசரர் ஆகிய முனிவர்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளது.

மகா மண்டபத்தின் நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் இரட்டை விநாயகர், அதிகார நந்தியும் வீற்றிருக்கிறார்கள். மேலும் வள்ளி, தெய்வானை சமேதராய் ஆறுமுகப் பெருமான், அருணகிரி நாதர், பஞ்சலிங்கம் வஜ்ரதேவர், சனீஸ்வரர் ஆகியோர்கள் தனித்தனி சன்னிதிகளில் காட்சி தருகிறார்கள். அதன் மேல் பாகத்தில் கோவர்த்தனாம்பிகைக்கு தனி கோயில் உள்ளது. மகாமண்டபத்தை அடுத்து மலையைக் குடைந்து மண்டபம் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனை அர்த்த மண்டபம் என்று அழைக்கிறார்கள். அங்குள்ள கர்ப்பகிரகத்தில் ஆறுமுகப் பெருமான் வடக்கு திசை நோக்கி திருமணக் கோலத்துடன் காட்சி தருகிறார். இந்த கர்ப்பகிருஹ பாறைகளில் அர்த்த சித்திர உருவில் மகிஷாசுரமர்த்தினி, விநாயகர், பள்ளி கொண்ட பெருமான், வராக மூர்த்தி, நரசிம்ம மூர்த்தி ஆகியோர் காட்சி தந்து அருளுகிறார்கள். மூலவர் முருகப் பெருமான் சன்னிதிக்கு அருகில் மகாலெட்சுமி, மதாங்க முனிவர் ஆகியோருடன் பெருமாள் காட்சி தருகிறார்.

சிவபெருமான் சத்திய கிரீசுவர சிவலிங்கமாக கற்பக விநாயகருக்கு காட்சி தருகிறார். திருக்கோயிலின் உட்புறச் சுவர்களில் சோமாஸ்கந்தர், கோபூஜை செய்யும் பார்வதி தேவி, சந்தியா தாண்டவம் புரியும் அம்பலக் கூத்தன் ஆகியோரின் உருவங்கள் உள்ளது.

இக்கோயிலில் பிரகாரமே இல்லாமல் மண்டபங்கள் அமைந்த கோயிலாக உள்ளது. இராஜகோபுர வாசலில் இருந்து மூலவரான முருகப் பெருமான் சன்னிதி வரை மண்டபங்களாகவே காணப்படுகிறது. இதர தெய்வங்களெல்லாம் மூலவரின் சன்னிதியை ஒட்டியே உள்ளது.

ஆறுமுகப் பெருமான் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டு வீற்றிருக்க, இடது புறம் தெய்வானையை, ஒரு திருக்கரம் அணைத்திருக்க, இன்னொரு கரம் ஹஸ்தமாக விளங்க மற்ற பத்து திருக்கரங்களும் போர்ப்படைகளைத் தாங்கி நிற்கிறது.

இங்கு ஆறுமுகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படாமல், அவர் திருக்கரத்திலுள்ள வேலுக்குதான் அபிஷேகம் செய்யப்படுகின்றது. எண்ணெய் காப்பும், புனுகும் சார்த்தப்படுகின்றது.

முருகப்பெருமான் பிரணவத்தின் பொருளை சிவபெருமானிடமிருந்து நேரிடையாகக் கேட்டு உணராமல், சிவபெருமான் சக்திக்கு உபதேசிக்க அவள் மடியிலிருந்தவாறு முருகன் கேட்டறிந்தார். இப்படி மறைமுகமாகக் கேட்டது தவறு என்பதை உணர்ந்த முருகப் பெருமான் பரிகார நிமித்தமாக இக்குன்றின் மீது தவமிருந்தார் என்று கூறுகிறார்கள்.

கந்தப்பெருமான் தேவசேனா தேவியை பங்குனி உத்திர திருநாள் அன்று திருமணம் செய்து கொண்டதால் அந்நாளையும், தைப்பூசத் திருநாள் பத்து நாட்கள், திருக்கார்த்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமணர்கள் வாழ்ந்த எட்டு மலைகளுள் இத்திருமலையும் ஒன்று எனப்படுகிறது.

"மூவிரு முகங்கள் போற்றிமுகம் பொழில் கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
மாவடிவைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி போற்றி!"
Area : Madurai
Bus Route :
www.thiruthalam.com