www.thiruthalam.com - Article
Mangadu Kamatchi or Thavak Kamatchi Temple
Specialities : General  
x மாமரங்கள் அடர்ந்த காடு. காமாட்சி அம்மன் மாங்காட்டில் தவம் செய்தபோது அக்காட்டிலோ, அருகிலோ யாரும் குடி அமர்ந்ததில்லை. சில மைல் கற்கள் தொலைவிற்கு அப்பால் கோவூரில் மக்கள் வசித்தனர். அங்கு மாடுகள் கன்றுகளை மேய்த்து வாழும் குடும்பத்தினரும் வசித்து வந்தனர். ஆடு, மாடு மேய்ப்பவர்களை இடையர்கள் என்றும் யாதவர்கள் என்றும் கோவலர்கள் என்றும் அழைப்பார்கள். பசுக்களும் பசு மேய்ப்பவர்களும் வாழ்ந்த இடமாதலால் அவ்வூர் கோவூர் என அழைக்கப்பட்டது. (கோ-பசு).

அவ்வூரில் வசித்து வந்த ஆயர் குலத் தமிழர்கள் தனது மாடு கன்றுகளை அருகில் உள்ள பெருங்காடாய்க் காட்சி அளித்த மாங்காட்டில் மேய்த்து வந்தார்கள். அவர்களில் ஒரு சிறுவன் சில மாடுகளை அம்மன் தவம் செய்யும் பகுதிக்கு அருகிலேயே மேய்த்து வந்தான். மாலையில் வீடு திரும்பிய பிறகு அவன் மேய்த்து வந்த மாடுகளில் ஒரு பசுவின் மடியில் கனமில்லை, கறப்பதற்குப் பாலில்லை. அன்று காரணம் அறியாமல் விட்டுவிட்டனர். மறுநாளும், அதன் மறுநாளும், தொடர்ந்து அந்தப் பசுவின் மடி பால் வறண்டு வந்தது. அந்த மாடுகளை வைத்திருந்த உரிமையாளர் சிறுவனை மிரட்டிக் கேட்க, சிறுவன் யாதுமறியாமல் ஒன்றும் புரியாமல் திகைத்தான். உண்மைக் காரணம் கூறவில்லையெனில் தகுந்த தண்டனை உண்டு என எச்சரித்து மறுநாள் அச்சிறுவனை மாடுகளை மேய்த்து வரப் பணித்தார்.

மறுநாள் அச்சிறுவன் அந்த மாட்டை மிகவும் கவனத்துடன் மேய்த்துக் கொண்டு அதனைத் தொடர்ந்தான். மற்ற மாடுகளை விடுத்து அம்மாடு மட்டும் தனித்து அடர்ந்த பகுதிக்குள் செல்வதைக் கண்டான். அவனும் பின்தொடர்ந்தான். அப்பொழுது அந்தப் பசு பிலத்துவாரத்தில் பாலைச் சொரிவதைக் கண்டான். திடுக்கிட்டான்.

'எங்கும் சிவனிருப்பான் ஆனாலும் ஏசற்ற
சங்கமத்தும் சற்குருவின் தன்னிடத்தும் - லிங்கத்தும்
ஆவினடம் பெல்லாமும் அவரித்து நறிகினும் பால்
பாவு முலைக்கண் மிகுதிப்பார்!"
- (சிவஞானப்பிரகாச வெண்பா)

பசுவின் உடல் முழுவதும் பால் நிறைந்திருந்த போதிலும் மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவது போன்றும், சூரியன் எங்கும் பரவியிருந்தபோதும் பளிங்குக் கல்லின் மூலமே கிரணங்கள் வெளிப்படுவது போன்றும், நிலத்துக்கடியில் நீர் நிறைந்திருந்த போதும் தோண்டிய இடத்தில்தான் நீர் வெளிப்படுவது போன்றும் இறைவன் எங்கும் வியாபித்திருந்த போதிலும் ஆலயங்களிலுள்ள மூர்த்திகளின் மூலமாகவே இறைவன் வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள் செய்வான். இங்கே காமாட்சி அம்மனின் கடுந்தவத்தின் விளைவால் இறைவன் தன் கருணையை அம்மன் மீது பாலாய்ச் சொரிந்து கொண்டிருந்தான்.

உரிமையாளரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் காரணத்தை உணர்ந்து, வெகுண்டெழுந்து அந்தப் பசுவை நோக்கி ஒடிப்போய் தடியால் அடிக்க அச்சிறுவன் முற்படவே, அப்பிலத்துவாரத்தின் வழியாக ஒரு கன்னிப்பெண் வெளிப்பட்டாள். அச்சிறுவனைத் தடுத்து நிறுத்தினாள். "தான் அங்குத் தவம் செய்வதாகவும் பசு தினமும் தன்னிடத்தில்தான் பாலைச் சொரிந்து செல்வதாகவும் கூறி, தான் சில நாட்களில் அவ்விடத்தை விட்டு அகலப் போவதாகவும் அதுவரை இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்" என்றும் கேட்டுக் கொண்டாள்.

'உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்ககமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமந் தோய மென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!'
-(அபிராமி அந்தாதித் திரட்டு)

வெளிப்பட்டவளின் முகத்தில் வீசிய ஒளிச்சுடரையும் பேரெழிலையும் கண்ணுற்ற சிறுவன் திகைத்தான். அச்சமும் ஆச்சரியமும் அவன் நெஞ்சை நிறைக்க உடல் வியர்த்தான்.

'நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவதுன் மலர்ததாள் எழுதா மறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே!'
- (அபிராமி அந்தாதித் திரட்டு)

என மனம் அவளை வணங்கிக் கூத்தாடினாலும் அதிர்ச்சியால் எதுவும் பேசாமல் அச்சிறுவன் வீடு திரும்பினான். மாட்டின் மடியின் கனம் வழக்கம் போலவே பால் வறண்டிருந்தது. இதைக்கண்ட உரிமையாளர் மிகவும் கோபமுற்று அச்சிறுவனை அவதூறாகப் பேசி, அடித்துத் துன்புறுத்தினார். இத்துன்பத்தைப் பொறுக்காத சிறுவன் வெளியில் சொல்லக்கூடாது என்று அம்மன் கூறிய கட்டளை வாக்கை மீறானான். மனம் மாறினான். நடந்த உண்மையை ஊரார் அறியும் வண்ணம் உரக்கக் கூறினான்.

சிறுவன் சொன்ன சொல்லைக் கேட்ட மக்கள் திகைத்தனர். 'அந்தப் பெண் ஒரு தெய்வம்தான்' என்று புரிந்து கொண்டனர். அனைவரும் மாங்காட்டில் தவம் செய்து வந்த அன்னையை வழிபட்டனர். விழா எடுத்தனர். அன்னையும் அகம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டாள். அன்னையின் தவத்தால் ஈசனும் கனிந்தான்.
'கனியான கன்னி
காலூன்றித் தவமிருப்பதை எண்ணி
கனிந்தான் திருவுள்ளம்!
கனியவள் கரம்பிடிக்க
கனிவுடன் கவினுலகு விரைந்தான்!'
- காவனூர் தாமோதரன்

அன்னையின் தவத்தை ஏற்று, ஈசன் அம்மையை மணம்புரிய வருகின்ற காலத்தை அறிந்த அனைவரும் மழை கண்ட பயிராக மகிழ்ந்தனர். பூமிக்கு வருகின்ற இறைவனின் வருகையை வரவேற்க ஆவலுடன் அனைவரும் காத்திருந்தார்கள். இறைவன் வருகையைக் கண்டு அகமும் முகமும் பூத்திருந்தார்கள்.
Area : Mangadu
Bus Route :
www.thiruthalam.com