Article
Mangaadu Kamatchi Amman
Specialities : General  
x அருள்மிகு காமாட்சி அம்மன் வண்டுகள் சூழ்ந்து ரீங்காரம் பாடும் இம்மாங்காட்டில் மாமரக்காடுகளுக்கிடையில் மாமரத்தின் அடியில் சிவனை எண்ணியே தவம் புரிந்து பின் காஞ்சிபுரத்துக்குச் சென்று மணக்கோலம் பூண்டதாக வரலாறு. மாங்காட்டிலுள்ள காமாட்சி அம்மனை தவக்காமாட்சி (தபசு காமாட்சி), ஆதி காமாட்சி என்றும், காஞ்சி காமகோட்டத்திலுள்ள காமாட்சியை கல்யாணக் காமாட்சி என்றும் அழைப்பர்.

அழகிய கயிலாய மலைச்சோலையில் சிவனுள்ளம் கவர்ந்த பார்போற்றும் பேரெழிலாள் உமையம்மையார் விளையாட்டாய் (விளையாட்டாக ஒன்றும் பேசாதவராகச் சிவபெருமானுக்குப் பின்பக்கத்தில் போய்) காதற்குரிய அப்பெருமானின் காக்கும் இருவிழிகளையும் மின்னலாய் கணப்பொழுதில் குவளை மலர் செங்கரத்தால் இதழ் விரித்த மலர் மூடியதால், உலகங்கள் முழுவதும் கரிய இருள் பரவி உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன.

மாங்காடு காமாட்சி அம்மன்

சிவபெருமானின் கண்களின் ஒளியாலே எல்லாச் சோதிக்கும் தழைக்கின்ற தன்மையால், சந்திரனின் ஒளிக்கதிர்களும் மூன்று சுடர்களுள் மற்றவையான சூரியனின் வெயிலும், தீயின் ஒளியும், செம்மையான சுடரும், ஏனைய தேவர்களின் உடல் ஒளியும், எங்கும் உள்ள வேறு ஒளிகளும் அழித்து யாவும் இருள் மயமாக ஆயின.

தமக்கு ஒப்பாக எவரும் இல்லாத நாயகரான சிவபெருமானின் திருக்கண்கள் இரண்டையும் நித்திய கன்னியான தேவியார் தாமரை போன்ற கைகளால் மூட, அங்ஙனம் மூடிய ஒரு கணப் பொழுதில், நிலைபெற்ற உயிர்க்கூட்டம் யாவற்றிற்கும் எல்லையில்லாத ஊழிக்காலம் கழிந்தது. அத்தகைய தன்மையைப் பார்த்துச் சிவபெருமான் அருள் செய்யுந் திருவுளம் கொண்டார்.

உயர்ந்த தம் நெற்றியின் நடுவில் ஒப்பில்லாத ஒரு கண்ணை ஏற்படுத்தி, அக்கண்ணால் சிவபெருமான் அருள் நோக்கம் செய்து, எங்கும் நீங்குதற்கரிய தன்மையுடையதான பேரிருளைப் போக்கி, ந்னமையைச் செய்யும் கதிருடைய சூரியன், சந்திரன் முதலியவர்களுக்குச் சிறந்த பேரொளியைத் தந்தருளினார்.

மண் பொருந்திய உலகத்தில் மூடிய பேரிருள் முழுவதும் நீங்க, உயிர்க்கூட்டம் உள்ளத்துள் மகிழ்ச்சி மேலோங்கச் சிறப்புடையவும், நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் அருள் செயலை உமையம்மையார் கண்டு, தம் விளையாட்டுச் செயலுக்காகப் பயந்து, எம்பெருமானின் கண்களை மூடிய தம் இரண்டு கைகளையும் விரைந்து எடுத்தார்.

இந்நிகழ்வினை காஞ்சிப் புராணத்தில்

'இறந்தது படைப்பினாக்கம்; இகந்தன வேள்விச் செய்கை
பறந்தன தவந்தானங்கள் பறைந்தன கடவுட் பூசை
துறந்தன கலவியின்பம் தொலைந்தன அறிவின் தேர்ச்சி
மறைந்தன மறைநூற்கேள்வி மயங்கின உலகமெல்லாம்'

(தழுவக்குழைந்த படலம் - 31)

மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மனின் தவத்தின் தன்மை:

சூரிய சந்திரர்களே இறைவனின் கண்கள் என்று அழைக்கும் சிவனின் விழிகளிரண்டையும் விளையாட்டாய் உமையவள் மூடியதால் விதி விளையாட ஆரம்பித்தது. அனைத்து உயிர்களும் துன்புறுவதை அறிந்த ஈசன் சக்திக்கு சோதனையை அளித்தான். அனைத்து உயிரினங்களும் துன்பமடைந்தமையால், அந்தப் பாபத்தைப் போக்க இப்பூவுலகில் பிறப்பெடுத்து அடர்ந்த மாமரங்கள் அடங்கிய காட்டில் தனியாக உள்ள ஒற்றை மாமரத்தடியில் தவம் செய்து பிறகு தன்னை அடைய வேண்டும் என்ற ஆணையின்படி எல்லாம் வல்ல ஈஸ்வரி இம்மாங்காட்டில் ஒற்றை மாமரத்தடியில் (ஏகாம்பரம் ஏகம் ஆம்பரம் ஒற்றை மாமரம்) (பஞ்சாக்னியை - ஐந்தணல் - ஐந்து குண்டங்களில்) பஞ்ச பூதங்களை நெருப்பாக்கி, அப்பஞ்சாக்னியில் நடுக் குண்டத்தில் ஊசி முனை போன்ற அக்னி ஜூவாலை மீது தன் இடக்காலின் பெருவிரலின் நுனிப்பகுதி படும்படி வைத்து வலக் காலைத் தூக்கி மடித்த நிலையில் வலக் காலைத் தொடைக்கு மேற்புறமாய் மடித்து தொப்பூழ் வரையிலும் நின்ற வண்ணம் தன் இடக் கையை நாபிக் கமலத்திறகருகே சின்முத்திரையாக மணிவயிறு சேர ஒட்டி வைத்துக்கொண்டு, வலக் கையில் (உருத்திராட்ச மாலையை) ஜபமாலையுடன் தலைக்கு மேல் கையை உயர்த்தியும் தன் இடை வரை கூந்தலை விரித்த வண்ணமும், தன் அழகிய விழிகளை மூடிய நிலையிலும், திருவாய்மலர் பஞ்சாட்சரத் திருமந்திரத்தை ஓயாமல் உரைத்த வண்ணம் தன்னை ஐயனுடன் இணைத்துக் கொள்ளக் கடுமையான தவம் செய்கிறாள். இந்த தியானம் "யோக தியானம்" என அழைக்கப்படுகிறது.

தேவி தன்னைப் பிரித்து வைத்துப் பாடாய்ப்படுத்தி பம்பரமாகச் சுழற்றும் பரம்பரன் இந்நிலையிலும் கூடத் தன் வலப்பக்கமாக இருக்கிறான் என்ற உணர்வில், வலக் காலை ஊசி மீது ஊன்றாமல் அதற்கே ஏற்றம் கொடுத்து தூக்கி உதரத்தில் அழுத்திக் கொண்டாள்.

சிவத்தை அடையும் தீவிரத்தில் தீயின் வீரியம் காமாட்சியைத் தீண்டியதாகத் தெரியவில்லை. உயிரன்பனுடன் ஊஞ்சலாடும் நாளுக்காக ஊசலாடிய அவள் மனதுக்கு, ஊசி தன் மலர்ப்பாதத்தைத் துளைத்துக் குளறுவதும் தெரியவில்லை. தொடங்கிவிட்டாள் தவத்தை.

பிறகு ஓர் ஊசலாட்டமும் இல்லை உள்ளத்தே சலனமற்ற சமுத்திரமாக அம்மனின் அகம் சிவத்தியானத்தில் ஒருமித்தது.

மேலே கொளுத்தும் கதிரவன், நாற்புறமும் பஞ்சாக்னி, உள்ளத்திலோ சிவாக்னி, தான் நெருப்புக்குள் இருந்தாலும் பிறரைக் குளிரக்குளிர வாழவைக்கும் தனியொரு தாய் அவள்.

நெடுங்காலம் தவமியற்றினாள் தேவி.
Area :
Bus Route :

Post Your Comment :
Please fill in the following fields here:
ad
 
 
 
 
 
 
All Rights Reserved By Thiruhalam @ 2010